கோழிப்பண்ணைகளில் திடீர் ஆய்வு வடமாநில தொழிலாளர்களுடன் டிஐஜி கலந்துரையாடல்

*பணி பாதுகாப்பிற்கு உறுதி

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சேலம் சரக டிஐஜி திடீரென ஆய்வு செய்து வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், கோழித்தீவன ஆலைகள், செங்கல் சூளைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்து வேலை செய்து வருகிறார்கள். வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

அதன்படி, அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது என்பதை கண்காணிக்க ஒவ்வொரு வாரமும் வருவாய் கோட்டாட்சியர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தனி வலைதளம் உருவாக்கப்பட்டு அவர்களின் விபரங்களை பதிவு செய்யும்படி, வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும், தனியார் நிறுவன உரிமையாளள்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வடமாநில தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பில், நாமக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் உள்ளூர் போலீசார் சென்று வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்கள். இந்நிலையில், சேலம் சரக டிஜஜி ராஜேஸ்வரி, நாமக்கல்லை அடுத்த லத்துவாடியில் உள்ள கோழிப்பண்ணைகளை திடீர் ஆய்வு செய்தார்.

அங்கு பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். கோழிப்பண்ணைகளில் வேலை செய்து வரும், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் டிஜஜி இந்தியில் பேசினார். அப்போது அவர், இங்குள்ள பணி சூழல் உங்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா என கேட்டறிந்தார். அதற்கு அவர்கள், பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து டிஜஜி ராஜேஸ்வரி தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நல்ல முறையில் பழகுகிறார்களா என்றும் கேட்டறிந்தார். அதற்கு அவர்கள், இங்குள்ள மக்கள் சகோதர-சகோதரிகள் போல பழகுவதாக தெரிவித்தனர். இதைகேட்ட டிஜஜி இதை உங்கள் மாநிலத்தில் உள்ள உறவினர்களிடம் தெரியப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார். அப்போது கோழிப்பண்ணை உரிமையாளர் செந்தில், வெளி மாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் பணிகள், விடுமுறை நாட்கள் குறித்து டிஜஜியிடம் கூறினார். பின்னர் டிஐஜி ராஜேஸ்வரி, தொழிலார்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொணடார். இந்த ஆய்வின்போது காவல்துறை அதிகாரிகள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் செந்தில், லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: