நள்ளிரவில் கண்முன்னே காதலனுடன் தனிமை கணவனை சரமாரி வெட்டி விட்டு போலீசில் சரணடைந்த மனைவி

* தகாத உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

* தப்பி ஓடிய மெக்கானிக்குடன் கைது

நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி அருகே கணவன் கண்முன்னே காதலனுடன் தனிமையில் இருந்ததை தட்டிக்கேட்டதால், கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி, போலீசில் சரணடைந்து நாடகமாடினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய மனைவி மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராஜாமணி(50). இவரது மனைவி செல்வி (45). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மூத்த மகள் இறந்து விட்டார். 2வது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். மூன்றாது மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ராமன்(26) என்பவருக்கும், செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

 தகவல் அறிந்த ராஜாமணி, மனைவியிடம் தட்டிக்கேட்டதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டில் வயதுக்கு வந்த பெண் உள்ளது. இதுபோன்ற தவறான உறவை விட்டு விடு என ராஜாமணி செல்விக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அவர் கேட்காமல், தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் ராஜாமணி, செல்வி மற்றும் மகளுடன் தூக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பேச்சு சத்தம் கேட்டு ராஜாமணி கண்விழித்து பார்த்தார். அப்போது, வீட்டினுள் ராமன், செல்வி இருவரும் தனிமையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, இனி ராஜாமணி உயிருடன் இருந்தால் நமக்கு சிக்கல் எனக்கூறி, அங்கிருந்த கொடுவாளை எடுத்து வந்து ராஜாமணியின் தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

 இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாமணி சரிந்து விழுந்தார். இதைப்பார்த்த ராமன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிய செல்வி, கொடுவாளை வீட்டின் வாசலில் வைத்து விட்டு, தொப்பூர் காவல் நிலையம் சென்று, குடும்ப தகராறில் கணவனை வெட்டி விட்டதாக கூறி சரணடைந்தார். இதனிடையே நள்ளிரவு 1 மணியளவில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜாமணியின் வீட்டுக்கு வந்த தொப்பூர் போலீசார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள செல்வியிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்வி நடந்த சம்வத்தை கூறி ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமனை பிடித்து வந்த போலீசார், விசாரணைக்கு பின் இருவரையும் கைது செய்தனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமனை தர்மபுரி கிளை சிறையிலும், செல்வியை சேலம் சிறையிலும் அடைத்தனர். கணவன் கண்முன்னே வீட்டில் காதலனுடன் தனிமையில் இருந்து, தட்டிக்கேட்டதால் கொடுவாளால் வெட்டிய மனைவி, காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: