அண்ணாநகர்: விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபு (30). இவர், திருவேற்காடு பகுதியில் தங்கியவாறு, கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது ஊருக்கு சென்றுவிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, செல்போனில் பேசியவாறு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர், திடீரென அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனால், அதிர்ச்சியடைந்த பிரபு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மடக்கி, பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், செல்போன் பறித்த நபர் நெல்லூர் மாவட்டம் கும்மரி தெருவை சேர்ந்த தேவகொண்டசாய் (25) என்பதும், இவர் மீது கிண்டி போலீசில் செல்போன் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.