×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.

 கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  7ம் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.



Tags : Panguni festival ,Kapaleeswarar Temple ,Mylapore , Panguni festival begins at Kapaleeswarar Temple in Mylapore: Devotees participate in large numbers
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்