இயற்கை உரம் தயாரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் பயிற்சி மையம்: சட்டப்பேரவையில் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை:  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கும்மிடிப்பூண்டி டி.ஜெ.  கோவிந்தராஜன்(திமுக) பேசியதாவது: ‘‘கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை  கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து கலவை  உரங்களுக்கு மானியம் வழங்க அரசு ஆவண செய்யுமா? நானும் ஒரு விவசாயி  என்கின்ற வகையில் உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள்  அதிகரிக்கும்போது, மண் வளம், இயற்கை வளம், மனித சுகாதாரம்  பாதுகாக்கப்படும். ஆகவே, மானியம் கூடுதலாக வழங்கவும், விவசாயிகளுக்கு உயிரி  உரங்கள் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கவும் அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு  பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  பேசுகையில், ‘‘இதுவரை ரசாயன உரங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் சார்பில்  மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் தான் ரசாயன உரங்கள்  மானிய விலையில் விற்கப்படுகின்றன. அதேநேரத்தில் ரசாயன உரங்கள் தவிர்த்து  இதர இடுபொருட்களான உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்களுக்கு  ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் மூலமாக மானியம் எதுவும் இதுவரை  வழங்கப்படுவதில்லை. உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள்  பெரும்பான்மையாக வேளாண் துறை மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு, இவற்றின் விலை  செலவினங்கள் மற்றும் கணக்கில் கொள்ளப்பட்டு, தமிழக அரசினால் குறைந்தபட்ச  விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

டி.ஜெ.  கோவிந்தராஜன்:  யற்கை உரம் தயாரிப்பதற்கு கும்மிடிப்பூண்டி பகுதியில்  அதற்கான பயிற்சி மையமும், தயாரிப்பதற்குண்டான வழிவகைகளை ஏற்பாடு  செய்யப்படுமா?

அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன்: இப்போது ரசாயன உரங்கள் பயன்படுத்துவதைவிட இயற்கை  உரங்கள், நுண்ணூட்ட உரங்களை பயன்படுத்த வேண்டுமென்று ஒரு விழிப்புணர்வு  விவசாயிகளிடத்திலும் அதே நேரத்தில் நுகர்வோரிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.  ஆகவே, அந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகளினுடைய விருப்பத்திற்கேற்ப  கும்மிடிப்பூண்டி பகுதி மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் தேவைப்படுகின்ற  இடங்களில் இதுபோன்ற புதிய அமைப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: