×

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளி மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் பெண்டகோஸ்டல் சர்ச்கள் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.  அதன்படி கல்வி உதவித்தொகையாக 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரையும் வழங்கப்படும். விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகையாக ஒரு லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000, திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000 மற்றும் பெண்களுக்கு ரூ.5,000, மகப்பேறு உதவித் தொகை ரூ.6,000 மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதந்தேறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும்,  விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறும்படி அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : Welfare Board , Ministers and staff working in Christian churches can apply to join the Welfare Board: Collector Information
× RELATED பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்