புதுடெல்லி: ‘எனது எந்த உரிமையையும் கேட்காமல், உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறேன்’ என அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி மக்களவை செயலகத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவருக்கு டெல்லியில் ஒதுக்கப்பட்ட 10, துக்ளக் லேன் அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென மக்களவை செயலகம் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. ராகுலுக்கு அவகாசம் தேவைப்பட்டால், அதைப் பற்றி மக்களவை வீட்டு வசதி குழுவுக்கு கடிதம் எழுதினால் அதை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு அடுத்த நாளான நேற்றே ராகுல் பதில் கடிதம் அனுப்பினார். ராகுல் தனது கடிதத்தில், ‘மக்கள் ஆணையால் 4 முறை மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த பங்களாவில் நான் வசித்த காலத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடமைப்பட்டுள்ளேன். எனது எந்த உரிமையையும் கோராமல், உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு நான் நிச்சயமாக கட்டுப்படுவேன்’ என கூறி உள்ளார்.
* எனது பங்களாவை தருகிறேன்: கார்கே நாடாளுமன்றத்திற்கு நேற்று செல்லும் முன்பாக பேட்டி அளித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘ராகுலை அச்சுறுத்தும், அவமதிக்கும் பாஜ அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டிக்கிறேன். இனி ராகுல் அவரது தாயார் சோனியா காந்தியுடன் எண்10, ஜன்பத் இல்லத்தில் சென்று தங்கலாம். இல்லாவிட்டால், என் வீட்டிற்கு வரலாம். அவருக்காக எனது பங்களாவை காலி செய்து தர தயாராக இருக்கறேன்’’ என்றார். இது அற்ப மனிதர்களின் அற்பமான அரசியல் என மாநிலங்களவை எம்பி கபில் சிபல் கண்டித்துள்ளார். அதே சமயம், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘‘இந்த சொத்து யாருக்கும் சொந்தமானதல்ல. அது மக்களுக்கு சொந்தமானது’’ என்றார்.