திருவள்ளூர்: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், 58 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்,
மின்வாரிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை, தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கடந்த 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று கோட்டையை நோக்கி பேரணி சென்றனர். இதனால் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களை பூட்டிவிட்டு கோட்டையை நோக்கி செல்லும் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டனர். இதனால் மின்கட்டண வசூல் நேற்று நடைபெறவில்லை.