×

2022-2023ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டில் ரூ.26,353 கோடி ஒதுக்கீடு: பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

பேரவையில் நேற்று 2022-23ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டில் ரூ.26.353 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை (துணை பட்ஜெட்) வெளியிட்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.26,352.99 கோடி நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், ரூ.19 ஆயிரத்து 776 கோடியே 50 லட்சம் வருவாய் கணக்கிலும், ரூ.3 ஆயிரத்து 642 கோடியே 26 லட்சம் மூலதன கணக்கிலும், ரூ.2 ஆயிரத்து 934 கோடியே 23 லட்சம் கடன் கணக்கிலும் அடங்கும். 2022 அக்டோபர் 18ம் தேதி 2022-23ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ‘புதுப்பணிகள்’ மற்றும் ‘புது துணை பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலை பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதி ஒதுக்கம், கூட்டுறவு நகை கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு போக்குவரத்து செலவினங்களுக்காக உணவு மானியத்தில் ரூ.2,140 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வுக்கால பலன்களுக்காக ரூ.1,032 கோடி கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பால்வளத் துறையின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்துக்கு வட்டியில்லா கடனாக ரூ.150 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் நிலுவை செலவினங்களுக்காக ரூ.1,393 கோடியே 38 லட்சம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Palanivel Thiagarajan , Allocation of Rs 26,353 Crore in Supplementary Budget 2022-2023: Palanivel Thiagarajan Announcement
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்