நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருடிய விவகாரம் பணிப்பெண் ஈஸ்வரியை 2 நாள் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா (41) இவர், கடந்த மாதம் 27ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தங்கை திருமணத்திற்கு தங்கம், வைர நகைகள், நவரத்தின  நகைகளை அணிந்து, பிறகு எனது வீட்டில் உள்ள லாக்கரில் அனைத்து நகைகளும் வைத்தேன். அதன் பிறகு செயின்ட் மேரி சாலையில் உள்ள வீடு, பின்னர் சிஐடி காலனியில் உள்ள தனது கணவர் தனுஷ் வீட்டிற்கு நகைகள் உள்ள லாக்கர் மாற்றப்பட்டது. அதன் பிறகு கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் செயின்ட் மேரி  சாலையில் உள்ள குடியிருப்புக்கு நகைகள் உள்ள லாக்கர் மாற்றப்பட்டது.  

பின்னர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி எனது போயஸ் கார்டனில் உள்ள  வீட்டிற்கு லாக்கர் மாற்றப்பட்டது. எனது லாக்கர் சாவிகள் எனது ஊழியர்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோருக்கு நன்றாக தெரியும். நான் வீட்டில் இல்லாத போது, அவர்கள் தான் வீட்டிற்கு சென்று பணிகளை செய்து வந்துள்ளனர். பிறகு கடந்த பிப்ரவரி 10ம் தேதி எனது லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்த போது, அதில் இருந்து 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. வீட்டில் உள்ள லாக்கர் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மட்டும் மாயமாகி இருப்பதால் 3 ஊழியர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்தி எனது நகைகளை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யா வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈஸ்வரி வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.95 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது 30 சவரன் தங்கம், வைர, நவரத்தின நகைகள் கொள்ளை போனதாகவும் அதன் மதிப்பு ரூ.3.60 லட்சம் மதிப்பு என கூறியிருந்தார். ஆனால் கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடம் இருந்து புகார் அளித்ததை விட கூடுதலாக 100 சவரன் தங்க நகைகள், பல கோடி மதிப்பிலான வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே ஐஸ்வரியா வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட நகைகள் எவ்வளவு என்று உறுதி செய்யப் பட்டவில்லை. எனவே வேலைக்கார பெண் ஈஸ்வரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் தேனாம்பேட்டை போலீசார் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலைக்கார பெண் ஈஸ்வரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டது. ஈஸ்வரியை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து திருடப்பட்ட நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: