அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு: அண்ணாமலை, எல்.முருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விசிக தலைவர் திருமாவளவன்

ஈபிஎஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும். தற்போது அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள் ஒன்று தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர், சமூக நீதியை பாதுகாத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக நீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமப்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற துரோகமாகும். எனவே இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த முன் வர வேண்டும். இதனை நானும் ஒரு சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் இருப்பவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மை, நேர்மை, உண்மை,உழைப்பு, உறுதிப்பாடு அனைத்தும் உங்களின் தனித்தன்மை. இவைகள் அனைத்தும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு. நீங்கள் பெற்ற வெற்றிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியினுடைய தலைவர் ஏ.சி. சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: