மோசடி குற்றவாளிகளுக்கும், பாஜ.வுக்குமான உறவு குறித்து அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜ ஆட்சியில் ஊழல்கள், முறைகேடுகள் விசித்திரமான முறையில் அரங்கேறி வருவதை சமீப காலமாக அம்பலமாகி வருகின்றன. பிரதமர் மோடிக்கும், கௌதம் அதானிக்கும் இருக்கிற உறவு குறித்து ராகுல்காந்தி கடந்த பிப்ரவரி 7ம் தேதி மக்களவையில் புகைப்பட ஆதாரத்துடன் பேசிய பேச்சு. மோடி உள்ளிட்ட பாஜவினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் கௌதம் அதானி 3வது இடத்திற்கு எப்படி உயர்ந்தார். இதில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்று குற்றச்சாட்டு கூறியதற்கு இதுவரை பதில் இல்லை. கர்நாடகாவில் பாஜ எம்எல்ஏ மாடால் விருப்பாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் ரூ.41 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மாடால் விருப்பாக்ஷப்பாவும் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, கர்நாடக பாஜகவிற்கு 40 சதவீத கமிஷன் ஆட்சி என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இத்தகைய ஊழலில் பாஜ எம்எல்ஏவே சிக்கியிருக்கிறார். அதேபோல, தமிழ்நாட்டில் பாஜ தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள்  தங்களை பாதுகாத்து கொள்ள பாஜவில் சேர்வது தொடர்ந்து நடந்து வருவதை அனைவரும் அறிவார்கள். கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவினரால் பாஜவின் விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த கே.ஹரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூ.2400 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிற ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்தான் கே.ஹரிஷ்.

இவர் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.210 கோடி முதலீடு பெற்றிருக்கிறார். கே.ஹரிஷ் கடந்த 2022, ஜூன் 2ம் தேதி பாஜவின் விளையாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு 2 மாதங்களுக்கு முன்பே பொருளாதார குற்றப்பிரிவு ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி கொண்டிருந்தது. மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜ தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது. மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: