×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல்-துணைப்பதிவாளர் தகவல்

நெல்லை :  நெல்லை மாவட்ட கூட்டுறவு  பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள பால்  உற்பத்தியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையான விலை வழங்கப்பட்டு வருவதாக நெல்லை சரக பால்வளத்துறை துணைப்பதிவாளர் சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது தற்போது நெல்லை மற்றும் தென்காசி  மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சராசரியாக  33 ஆயிரம் லிட்டர் வீதம் பாலை கொள்முதல் செய்து வருகிறது.

நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தற்போது உற்பத்தியாளர்களிடம் பாலை  கொள்முதல் செய்து வருகிறது. மேலும் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான கலப்புத்தீவனம், தாதுஉப்புக்கலவை ஆகியவற்றை குறைந்த விலையில் வழங்குவதோடு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கறவை மாடு கடன் மானியத்துடன் வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு வசதி அளிக்கப்பட்டு வருகிறது. சங்கங்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை  தவறாமல் பால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கூட்டுறவு அல்லாத ஒரு சில பால் நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றன. அத்துடன் பால் உற்பத்தி குறைவான காலங்களில் அதிக விலைக்கும், அதிக பால் உற்பத்தியாகும்  காலங்களில் குறைந்த விலைக்கும் பாலை கொள்முதல் செய்கின்றன. இதனால் நிலையான விலை கிடைக்காமல் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால்,  எந்தவித லாபநோக்கமும் இன்றி பால் உற்பத்தியாளர்கள் நலன் சார்ந்து தொடர்ந்து செயல்பட்டு வரும் நெல்ைல மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் நலன் சார்ந்து  அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு நிலையான விலையை வழங்கி வருகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் பால்  கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து  அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பால் கூட்டுறவு சங்கங்கள் அல்லாத கிராமங்களில் புதிதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைத்து பயன்பெறலாம். மேலும் இதுதொடர்பான தகவல்களை 0462  2501987, 8925901975 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Vice President ,Paddy, South Kasi District , Nellai : Milk in Nellai, Tenkasi District on behalf of Nellai District Cooperative Milk Producers Union
× RELATED தமிழகத்தில் நாளை முதலே நடத்தை...