வனப்பகுதியில் நிலவும் வறட்சி எதிரொலி குன்னூரில் காட்டு யானைகள் தஞ்சம்

குன்னூர் :  வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக கடந்த மூன்று மாதங்களாக காட்டு யானைகள் இரை,தண்ணீர் தேடி நகர் பகுதியில் தஞ்சமடைந்துள்ளன.யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும்.காட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது.

சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் வாழ்ந்த 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து தற்போது உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது.  

ஆப்பிரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சிறியவை. யானைகள் சராசரியாக 60 வயது வரை வாழும் உயிரினமாகும். பாலூட்டும் இனங்களில் யானை இனம் தான் அதிக கர்ப்பக்காலம் உடையது. 22 மாதங்கள் குட்டியை கருவில் சுமக்கின்றன. யானைகள் எப்போதாவது அரிதாக இரண்டு குட்டிகளை ஈனுகின்றன.  பொதுவாக பெண் யானைகள்  50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனுகின்றன.

பாலூட்டி இனங்களில் யானைகள் தான் உருவத்தில் பெரியதாகும். யானைகள் அதிக வாசனை நுகரும் திறன் கொண்டது. காற்றில் வரும் வாசனையை வைத்து சுற்றுப்புறத்தை  அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அல்லது வேறு எதாவது ஆபத்தானவை அருகில் இருந்தாலோ பாதுகாப்பு இல்லையென்றால் உடனடியாக கூட்டமாக அந்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான மற்ற பகுதிக்குச்  சென்றுவிடுகின்றன. யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவுக்காக செலவிடுகின்றன.

சுமார் 130 முதல் 240 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. தேவையான உணவு முழுக்க ஒரு இடத்திலேயே கிடைக்காது என்பதனால், உணவைத் தேடி நெடுந்தூரம் நடந்து செல்லும் இயல்புடையது யானை. சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை ஒரு நாளைக்குள் நடந்து கடந்து விடும்.சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கிறது.

வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக எட்டிற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தற்போது குன்னூர் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் யானைகள் குன்னூரில் உள்ள காட்டோரி, கிளண்டேல், உலிக்கல், கரும்பாலம் உள்ளிட்ட பல இடங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உலா வருகின்றன. குடியிருப்பு பகுதியில் அருகே உள்ள வாழை மற்றும் செடி,கொடிகளை உண்டு செல்கின்றன. மக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் சார்பில் 15க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவற்றை கண்காணித்து வருகின்றனர்.

குன்னூர் பகுதியில் செல்லும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் அவை குன்னூர் ஆற்றில் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு மாற்றாக குன்னூர் ஆற்றினை கடந்து காட்டேரி அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பருகி செல்கின்றன. குட்டிகளுக்கு செல்லும் பாதையை கற்பித்தபடி செல்லும் யானை கூட்டம் அவற்றிற்கு பலா உள்ளிட்டவற்றை எவ்வாறு உண்பது என்றும் கற்பிக்கின்றன.

தாயின் காலுக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாக செல்லும் குட்டிகள் காடுகளுக்குள் மகிழ்ச்சியாக உலா வருகின்றன. யானை கூட்டம் ஓர் சோலை மரக்காடுகளுக்குள் புகுந்துவிட்டால் அங்கிருக்கும் மற்ற வேட்டை விலங்குகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுகின்றன. கோடை காலம் முடியும் வரை குன்னூரில் உள்ள யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட வேண்டாம் என்பது வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து கூறும் வன விலங்கு ஆர்வலர்கள் யானைகளின் வாழ்விடங்களை அழித்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். அதன் வழித்தடத்தில் குடியிருந்து யானைகளை குற்றம் சாட்டியும் வருகின்றனர். தற்போது வனத்துறையினர் மற்ற மாவட்டங்களில் தாழ்வான மின்கம்பங்கள் பட்டு உயிரிழந்த செய்தியை அறிந்து குன்னூரில் உள்ள மின் கம்பங்கள் அனைத்து இடங்களிலும் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக வனத்துறையினர் யானைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: