×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, தேர்தல்களை நடத்துவது என அனைத்து அரசுப் பணிகளும் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு ஊழியர்களை நேர்மையாகவும், நியாயமாகவும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் . தேர்வாணையம் மற்றும் இதர அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு  பெரிய அளவில் என்று பார்த்தால், ரூப் 2, 2ஏ பதவிகளுக்கான 5,500 பணியிடங்களுக்கும், குரூப் 4 பதவிகளுக்கான 10,000 பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வரவில்லை.

இதன் தொடர்ச்சியாக, அண்மையில் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதுபோன்ற சந்தேகம்இளைய சமுதாயத்தினரிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் முடிவுகளை அறிவித்து பணியாளர்களை நியமிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உண்டு. ஆனால் தொடர் குளறுபடிகள் நடைபெற்று வருவது வேதனைக்குரியது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டு இருப்பதாக நிதி அமைச்சர் அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து இருக்கிறார். விளக்கம் கேட்பது என்பதைவிட விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பொழுதுதான் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்.

 முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


Tags : TNPSC Group 4 , TNPSC Group 4 Examination Malpractice Complaint O Panneer Selvam Petition
× RELATED 393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4...