சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் திடக்கழிவு மேலாண்மைக்கான அறிவிப்பு: மாநகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 20 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய எண்ணெய் தயாரிக்கும் ஆலை மணலியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகளை, விஞ்ஞான ரீதியில் எரிக்க 5 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டி ஆலை ஏற்கனவே திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்டுள்ள 2 பணிகளுக்கான ஆலையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னர், செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட அனைத்து காம்பாக்டர் தொட்டிகளிலும், ஈர கழிவுகள் மற்றும் உலர் கழிவுகள் என்ற குறியீடுகள் தெளிவாக குறிப்பிடப்படும். அதன்படி, தனித்தனியாக கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படும். சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியும், மேலும், வாகன போக்குவரத்தினை மேம்படுத்த ஏதுவாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காலிமனைகளில் குப்பைகள், கட்டிடக் கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு கொசு உற்பத்தி மற்றும் துர்நாற்றம் போன்ற காரணத்தால் அருகாமையில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் காலி மனை உரிமையாளர்களை பொறுப்பாக்கி அவற்றை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிக்காக, சென்னை மாநகராட்சியில் இதற்கான கொள்கை அளவிலான திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.