×

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 318 பயணிகளுடன் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதனால் அந்த பயணி வலியால் விமானத்துக்குள் துடித்தார். விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கி, பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

அப்போது விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் விமானி அருகே உள்ள தமிழ்நாட்டில், சென்னையில் தரை இறக்கினால் மருத்துவ சிகிச்சைக்கு வசதியாக இருக்கும் என நினைத்தார். இதை அடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ காரணத்துக்காக விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார்.  உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிங்கப்பூர் விமானத்தை, உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதித்ததோடு, பயணிக்கான மருத்துவ வசதிகளையும் செய்து தரும்படி அறிவுறுத்தினர்.

அதன்பேரில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அமெரிக்க பயணி கென்னடியை  பரிசோதித்தனர். அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டும் என்று தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணி கென்னடிக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கினர்.  இதையடுத்து, பயணி கென்னடி விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு,  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  

அதன்பின்பு அமெரிக்க பயணி கென்னடி, மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து விமான நிறுவன அதிகாரிகள், சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு  தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அமெரிக்க பயணியின் உடல் தேறி முழு ஆரோக்கியமாக இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 317 பயணிகளுடன் சுமாரும் 4 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , Mid-air passenger suffers sudden chest pain: Emergency landing in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...