ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை மாநகராட்சியில் காங்கிரசார் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு: உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை

சென்னை: ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் சென்னை மாநகராட்சி கூட்டங்களில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று பிரதமர் மோடிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது. மோடி குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக கூறி சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இந்நிலையில், திடீரென எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்பது, ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டப் பேரவையில் பேசுவது, சட்ட சபையை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். அதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.அவர்கள் ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து பதாகைககள் அடங்கிய அட்டையுடன் சட்டப்பேரவைக்குள் சென்றனர். பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பினர்.

இதனால் நேற்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி இருந்தார். ஆனால், அதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று, ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கம் குறித்து சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பேசினார். அவரது பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதேபோன்று, நேற்று காலை சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்ட அரங்கிற்கு வரும் போது, ஒன்றிய அரசுக்கு எதிரான பதாகைகளை பிடித்தவாறு, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியின் நேற்றைய கூட்டம் முடிவடைந்ததும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திட்டமிட்டிருந்தனர். அதை காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

* பேரவையில் கண்டன தீர்மானம்?

முன்னதாக, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாடே அறியும், ஜனநாயக படுகொலை நடத்துள்ளது. 24 நாட்களுக்குள் விசாரணை, 24 மணி நேரத்திற்குள் தகுதி நீக்கம் என கூறுகின்றனர். ஹிட்லர், முசோலினி ஆட்சியிலும் இத்தகையை ஜனநாயக படுகொலை நடைபெறவில்லை. இது பிரதமர் மோடிக்கு எதிரான, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான போராட்டம். சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற அனுமதி கோரி உள்ளோம். இரவு சட்டமன்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்காக அனுமதி கோரி உள்ளோம்’’ என்றார். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தலைமை செயலக வட்டார தகவல் தெரிவித்தது.

Related Stories: