×

புளியம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: புளியம்பாக்கம் ஊராட்சியில், பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம், தபால் நிலையம், ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த ஊராட்சிக்கு பாலாற்ற படுகையில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம், குடிநீர் நாள்தோறும் சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விநியோகிக்கப்படும் குடிநீர் கோடை காலங்களில் முழுமையாக கிடைக்கப்படாத சூழ்நிலையில் அதற்கு ஏற்றவாறு, ஊராட்சியிலேயே பல்வேறு சிறு சிறு மின்விசை பம்புகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த குடிநீர் போதிய அளவில் இல்லாததாலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சிகள் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த குடிநீர் நிலையம் அமைத்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் இதனால் வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாற்று படுகை இதன்மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நாள்தோறும் சுழற்சி முறையில் குடிநீர் வினையாகித்து வருகின்றனர். இருப்பினும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், இ-சேவை மைய கட்டிடம் அருகே கட்டண குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டண சுத்திகரிப்பு நிலையத்தில் ஐந்து ரூபாய் செலுத்தினால், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கிடைக்கும். இதுபோன்று அருகாமையில் உள்ள ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், எங்கள் ஊராட்சியில் மட்டும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் காட்சி பொருளாக காட்சியளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சுகாதாரமான குடிநீர் பருக மாவட்ட நிர்வாகம் வாய்ப்பு அளித்தாலும், கூட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படாமல் உள்ளது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : Pulyambakkam Panchayat , Idle water treatment plant in Pulyambakkam Panchayat: Urge to take action
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை