×

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

* இன்று முதல் 6ம் தேதி வரை அமல்
* மாநகர காவல் துறை அறிவிப்பு

துரைப்பாக்கம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வருடாந்திர பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 6ம் தேதி வரை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நடப்பதை முன்னிட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி கருதி  தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

* வாகனம் நிறுத்த தடை

* 30ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்றும், வரும் 3ம் தேதி தேர் திருவிழா அன்றும், 4ம் தேதி அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).

* மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்). செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (300 இரு சக்கர வாகனம் மற்றும் 50 கார்). காவல்துறை வாகனங்கள்  சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (150 இரு சக்கர வாகனம் மற்றும் 30 கார்).

* போக்குவரத்து மாற்றம்

* ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, சென்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

* அடையாறிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா  ரோடு , சிருங்கேரி மடம் சாலை, வாரன் ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை  வழியாக தங்களது இலக்கை அடையலாம்.

* ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி  சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

* 30ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், வரும் 3ம் தேதி தேர் திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் வரும் 4ம் தேதி அறுபத்துமூவர் திருவிழா அன்று மதியம் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல் படுத்தப்படும்.


Tags : Mylapore ,Kapaleeswarar Temple Panguni festival , Kapaleeswarar Temple, Panguni festival, Mylapore, traffic diversion
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்