சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் திரு.எ.வ.வேலு, (27.3.2023) இன்று மாலை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு ஆய்வுப் பணியை துவக்கிய அமைச்சர் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களுக்கு பிறகு செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளும் செயல்படுத்தியதை கேட்டு அறிந்து தலைமைப் பொறியாளர்களை பாராட்டினார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரியக் கட்டடங்களின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் மற்றும் அந்த வளாகத்திலேயே கட்டப்படவிருக்கும் அருங்காட்சியகம், மதுரையில் கட்டப்படும் கலைஞர் நினைவு நூலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணி, கிங் நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை கட்டடம், தமிழ்நாட்டில் 69 புதிய தொழில்நுட்ப் பணிமனைகள், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளில் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்து, தலைமைப் பொறியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.
தற்போது, அடிக்கல் நாட்டப்பட்ட நீதிமன்றக் கட்டங்களின் பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுத் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்படும் புதிய உதவிப் பொறியாளர்களுக்கு, உரிய களப்பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், தலைமைப்பொறியாளர்கள் (சென்னை மண்டலம்) க.ஆயிரத்தரசுராஜசேகரன், சத்தியமூர்த்தி, ரவிச்சந்திரன், இளஞ்செழியன் மற்றும் தலைமை கட்டடக் கலைஞர் மைக்கேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்குப் பெற்றனர்.