×

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்: ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற கோரிக்கை

வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள ஆற்காடு சாலை பிரபல தனியார் மருத்துவமனையை ஒட்டிச்செல்கிறது. இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களை சார்ந்தவர்களுக்காக ஆற்காடு சாலையில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள காந்தி ரோடு, மெயின் பஜார், சுக்கையவாத்தியார் தெரு, லத்தீப்பாட்சா தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு, பாபுராவ் தெரு, பேரி பக்காளி தெரு, பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை பிடிசி ரோடு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் லாட்ஜ்களும், விடுதிகளும், கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், ஓட்டல்களும் நிரம்பியுள்ளன.

இதனால் இந்த பகுதிகள் எப்போதுமே மக்கள் நெரிசலுடன், வாகன நெரிசலும் மிகுந்து காணப்படும். குறிப்பாக ஆற்காடு சாலையில் காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது மக்களையும், வாகன ஓட்டிகளையும் எரிச்சலடையும் வைக்கும் வகையிலேயே இருக்கும். இந்த நெரிசலுக்கு பிரதான காரணம் ஆக்கிரமிப்புகளே என்கின்றனர் பொதுமக்கள். ஆற்காடு சாலையை பொறுத்தவரை அதன் பழைய வரைபடத்தை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இருபுறமும் சுமார் 20 முதல் 30 அடி வரை தாராளமாக இடம் கிடைக்கும். தற்போதைய நிலையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தங்களின் இடத்தை தாண்டி ஆக்கிரமித்துள்ளன. அதற்கு மேல் நடைபாதை கடைகள் வேறு சாலையின் இருபுறமும் நிறைந்துள்ளது.

இதனால் 20 முதல் 25 அடியாக சுருங்கிப்போன சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் வேண்டய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலை செல்பவர்களுக்கு வேலூர் ஆற்காடு சாலையை காலை 10 மணி வரை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு, சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore-Arcot , Motorists stuck in traffic jams on Vellore-Arcot road daily: Demand for complete removal of encroachment
× RELATED வேலூர்- ஆற்காடு சாலையில் கட்டிடங்கள்...