டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அரசின் கொள்கை முடிவுகளை மட்டுமே அமைச்சர் என்ற முறையில் தான் எடுத்ததாகவும், இந்த புகாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் எஸ்.பி.வேலுமணி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட எஸ்.பி.வேலுமணியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.