திருவொற்றியூரில் படவேட்டம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்: கே.பி.சங்கர் எம்எல்ஏ பங்கேற்பு

 திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில், கேவிகே. குப்பம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மீனவ மக்களின் காவல் தெய்வமாக உள்ள படவேட்டம்மன் ஆலயத்தில் கடந்த 2021ம் ஆண்டு விரிவாக்கம் செய்து கே.பி.சங்கர் தலைமையில் திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி பந்தக்காலுடன் படவேட்டம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின.

இக்கோயிலில் 5 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் கோ பூஜை, கலச பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்று காலை படவேட்டம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் படவேட்டம்மன், விநாயகர் முருகன், ராஜகோபுரம், பஞ்ச கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

இந்நிகழ்வில் மத நல்லிணத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டம்மனுக்கு மரியாதை செய்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான ஏற்பாடுகளை கேவிகே.குப்பம் கிராமத் தலைவரும் ஆலய தர்மகர்த்தாவுமான கே.பி.சங்கர் எம்எல்ஏ மற்றும் கிராம நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் கே.பி.சங்கர் எம்எல்ஏ குடும்பத்தினர் மற்றும் சென்னை, திருவள்ளூர் பகுதியில் மீனவ கிராம தலைவர்கள் உள்பட ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

Related Stories: