×

மஞ்சூர் அருகே 9 மணி நேர போராட்டம் ஓடைக்குள் தவறி விழுந்த காட்டு மாடு பொக்லைன் மூலம் மீட்பு

மஞ்சூர்: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தின் நடுவே இருந்த ஓடைக்குள் தவறி விழுந்த காட்டு மாடு 9 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு நேருகண்டி. சமீப காலமாக இப்பகுதியில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டு மாடு ஒன்று தோட்டத்தின் நடுவே இருந்த ஓடைக்குள் தவறி விழுந்துள்ளது. ராட்சத உருவம் கொண்ட காட்டு மாடு குறுகிய ஓடைக்குள் விழுந்ததால் மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது.  இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து ரேஞ்சர் குமார் தலைமையில் வனவர் செல்வகுமார், வனக்காப்பாளர்கள் சுரேஷ்குமார், திலிபுகுட்டன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓடைக்குள் விழுந்த காட்டு மாட்டை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

முதல் கட்டமாக மாட்டை சுற்றி கட்டி கயிறு இழுத்தனர். ஆனால் மாட்டின் பாரத்தால் இம்முயற்ச்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பொக்லைன் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொக்லைன்  கட்டப்பட்ட ரோப் மூலம் வனத்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ஓடைக்குள் சிக்கியிருந்த காட்டு மாடை மாலை சுமார் 5 மணியளவில் மீட்டனர்.


Tags : Manjur , Manjoor, 9 hour struggle, wild cow, rescue
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...