சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் கங்கிராஸ் எம்.எல்.ஏ.க்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதை தொடர்ந்து, ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவரின் எம்பி பதவி பறிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை:
சட்டமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்துக்கு வரவேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசுவதற்கு சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.