ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்

சென்னை: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில்  தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் காலம் கடத்தாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அவரது குழந்தையை தலைமை ஆசிரியை கண்டித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: