கொளத்தூரில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்: ஆடல், பாடல் என பொதுமக்கள் உற்சாகம்

பெரம்பூர்: பரபரப்பான சென்னை வாழ்க்கையில் இருந்து பொதுமக்களை சற்று வெளியே கொண்டு வர, தனியார் அமைப்பு மூலம் மாநகராட்சி மற்றும் போலீசாரின் ஒத்துழைப்போடு ஹேப்பி ஸ்ட்ரீட் மகிழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  ஏற்கனவே, அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்காக ஏற்கனவே செம்பியம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தனர். அந்த வகையில் காலை 6 மணி முதல் தொடங்கிய நிகழ்ச்சியில் சிறுவர்கள், பொதுமக்கள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர் மற்றும் பெண்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு, அவர்கள் குழுவாக பிரிந்து நடனம் ஆடினர்.

சாலையில் பேட்மின்டன், பரமபதம், சைக்கிள் பந்தயம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை விதவிதமாக அலங்கரித்து, அதை கொண்டுவந்து நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினர். போக்குவரத்துத் துறை சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு போக்குவரத்து சம்பந்தமான விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஹரிசிங், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம், செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம், ஹெல்மெட் அணிந்து செல்வோம் போன்ற உறுதி மொழிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். மாநகராட்சி சார்பில், குப்பையை தரம் பிரித்தல், பொது சுகாதாரம் பின்பற்றுதல் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டன.

Related Stories: