×

போதையில் போக்குவரத்து காவலர் மீது கார் மோதிய விவகாரம் குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க ரூ.27 லட்சம் லஞ்சம்?...உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: குடிபோதையில் போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது ெசய்யாமல் இருக்க ரூ.27 லட்சம் பெறப்பட்டதா என விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், நீல் கிரீஸ் அருகே கடந்த 5ம் தேதி அதிகாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், மோகன் மற்றும் காவலர் ஜெயக்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மியூசிக் அகாடமி பகுதியில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி அதிவேகமாக வந்த கார் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் (39) மீது பயங்கரமாக மோதியது. இதில், படுகாயமடைந்த காவலர் ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, அடையாறு போக்குவரத்து போலீசார் கொலை முயற்சிக்கு ஈடான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், விபத்து ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் தாம்பரம் கிஷோர் மற்றும் மதன் என தெரியவந்தது. இவர்களில் கிஷோர் நடன கலைஞர். மதன் பிரபல ஜோதிடர் ஒருவரின் மகன். அதைதொடர்ந்து போலீசார் நடன கலைஞர் கிஷோரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே நடன கலைஞர் கிஷோரிடம் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நண்பர் மதனுடன் மது அருந்திவிட்டு வரும் போது, நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியதாகவும், அப்போது அவர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பணத்தை கொடுத்துவிட்டு தப்பி வந்தபோது தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உயர் போலீசாரின் கவனத்துக்கு சென்றது. அவர்களின் உத்தரவின்பேரில் நடந்த விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது. அதைதொடர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 5ம் தேதி அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்ட நுங்கம்பாக்கம் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு எஸ்ஐ முருகன், திருவல்லிக்கேணி போக்குவரத்து அமலாக்கப்பிரிவு எஸ்ஐ தாமஸ், காவலர்கள் சவுந்தரராஜன், கணேஷ்பாபு  ஆகிய 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் மீது கார் ஏற்றிய வழக்கில் இது நாள் வரை ஜோதிடர் மகன் மதன் என்பவரை போலீசார் கைது ெசய்யவில்லை.  இவர், முன்ஜாமீன் கோரும் முயற்சியில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

ஆனால், அவரின் 2 மனுக்களும் தள்ளுபடியானது. இந்நிலையில், இந்த விபத்து ெதாடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, கார் விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமாரின் சிகிச்சை, செலவுகளை மதன் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு கைமாறாக, குற்றவாளிகள் முன்ஜாமீன் கோரும்போது போலீசார் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. இதற்காக காவலர் சிகிச்சை செலவுக்கு ரூ.27 லட்சத்தை பணத்தை பல கட்டங்களாக ஊர்காவல் படையை சேர்ந்த ஒருவர் மூலம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை கார் விபத்தில் பாதிக்கப்பட்ட காவலர் ஜெயக்குமாருக்கு கொடுக்காமல் சம்பந்தப்பட்ட போலீசாரே எடுத்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் போது, குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று காவல் துறை சார்பில் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குற்றவாளி தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யாமல் இருக்கவும், பாதிக்கப்பட்ட காவலரின் சிகிச்சை செலவுக்கு என ரூ.27 லட்சம் வரை பணம் கொடுத்தும் போலீசார் தன்னை பழிவாங்குவதாக குற்றவாளி தரப்பில் இருந்தும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட போலீசார் தரப்பில் இருந்தும் ரூ.27 லட்சம் பணம் பெற்ற தகவலை கசியவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்துக்கு சென்றது. உடனே,  ரூ.27 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய புலனாய்வு பிரிவு போலீசாரிடம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து தற்போது போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Tags : Police Commissioner ,Shankar Jiwal , Rs 27 lakh bribe to avoid arresting the drunken traffic policeman?
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...