தண்டையார்பேட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தண்டையார்பேட்டை திலகர் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 100 பேருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு கண்சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து, 100 பெண்களுக்கு புடவை மற்றும் மஞ்சள் பை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையை தொடங்கி வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: வட சென்னை வளர்ச்சி பெற தமிழக முதல்வர் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
மேலும் மெரினா கடற்கரையைப்போல் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவிற்கு வாக்களித்தீர்கள்.
அதனால் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் வரும் தேர்தலிலும் உங்களுடைய ஆதரவை திமுகவுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது முதல்வர் சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறார். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிச் செயலாளர் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
