சென்னை: நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்கள் உள்பட முதன்மையான கல்வி நிறுவனங்களில் உள்ள துறைத் தலைவர் (எச்.ஓ.டி.) பொறுப்பு சுழற்சி முறையில் இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் துறைத் தலைவர் பொறுப்பை, பணி மூப்பு அடிப்படையில் மூத்த பேராசிரியர்கள் வகித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், இதில் சில புதிய முறையை கொண்டு வர இருக்கிறது. இதற்காக பல்கலைக்கழக விதியில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ‘சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர்களின் செயல் திறன் மற்றும் தகுதியின் அடிப்படையில், துறையின் பேராசிரியர் சுழற்சி முறையில் துறைத் தலைவராக இருப்பார். மற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற வேண்டும்’ என்று திருத்தப்பட்டு இருக்கிறது.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தரவரிசை மற்றும் பிற தரவரிசைகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த துறைத் தலைவர் சுழற்சி முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஜனநாயக மற்றும் திறமையான நிர்வாகத்துக்கு இந்த புதிய முறை வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய முறைக்கு செனட் கூட்டத்தில் உறுப்பினர்களின் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகவும், அதற்கு முன்பாக பல்வேறு விரிவான விவாதங்கள் மூலம் அவர்கள் தெளிவை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.