×

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் துப்புதுலங்கியது கறி விருந்து தகராறு முன்விரோதத்தில் ரவுடி திட்டமிட்டு கொன்றது அம்பலம்: ெகாலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை

சென்னை: பெரும்புதூர் அருகே நேற்று முன்தினம் இரவு அதிமுக பிரமுகரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்புதூர் அருகே கிளாய் கிராமம், தெருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (41). இவர், அதிமுகவில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளராக இருந்தார். மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இரும்பு ஸ்கிராப்புகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிளாய் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே தனது 4 நண்பர்களுடன் நாகராஜ் மது அருந்த சென்றுள்ளார். இதில் விஜயகாந்த், கண்ணன் என்ற 2 பேர், மதுபாட்டில் வாங்க பெரும்புதூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு நாகராஜ் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவருடன் இருந்த 2 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து  பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாகராஜின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.  அதில், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்வகுமார் (35) என்பவர், தனது கூட்டாகளுடன் சேர்ந்து, நாகராஜை கொலை செய்துவிட்டு, சோகண்டி பகுதியை நோக்கி பைக்கில் செல்வது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கிளாய் பகுதியில் உள்ள கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை முடிந்ததும், அங்கு 12 ஆடுகளை வெட்டி கறி விருந்து நடந்துள்ளது. இந்த கறி விருந்தில், அதிமுக பிரமுகர் நாகராஜ் பரிமாறியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமார், தனது நண்பர்களுடன் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். இவர், கறி விருந்து பரிமாறிய நாகராஜிடம், ‘‘மது அருந்துவதற்கு ஆட்டுக் கறியை பார்சல் தரவேண்டும்,’’ என கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் நாகராஜிக்கும், செல்வகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, ரவுடி செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களை நாகராஜ் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் ஆத்திரமடைந்த ரவுடி செல்வகுமார், அதன்பிறகு பலமுறை அதிமுக பிரமுகர் நாகராஜை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். எனினும், அவரை சுற்றி ஒரு கும்பல் பாதுகாப்புக்கு வந்ததால், செல்வகுமாரின் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிளாய் பகுதியில் ஒதுக்குப்புறமாக நாகராஜ் மது அருந்த வந்திருப்பதை அறிந்த ரவுடி செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்கள், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.  இதையடுத்து, தலைமறைவான ரவுடி செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK , Clues in the murder case of AIADMK leader revealed: 4 special forces to catch the rioters
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது