சென்னை: சென்னையில் மேடான பகுதிகளில் இருக்கும் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மெட்ரோ பாலிட்டன் நகர்களில் 4வது இடத்தில் சென்னை உள்ளது. 176 சதுர கிலோ மீட்டராக இருந்த சென்னை மாநகரம் தற்போது விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து 426 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு முக்கியத் தேவையான தண்ணீர் தேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளும் வேகமாக துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரப் பகுதிகளில் ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு இதேபோன்ற நிலை இல்லாமல் இருந்தது.
எனவ கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடந்து வருகிறது. புதிதாக இணைந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் தெருக்களில் கடைசி பகுதி வரை செல்வது இல்லை. மேடான பகுதிகளுக்கு தண்ணீர் போகாததால் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தினமும் 420 லாரிகளில் இதுபோன்று வினியோகிக்கப்படுகிறது. இது தவிர சென்னை நகரின் பழைய பகுதிகளிலும் மேடாக இருக்கக்கூடிய ஒரு சில பகுதிகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கவில்லை. அதாவது, 80 சதவீதம் பகுதிகள் மட்டுமே குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளன.
பழைய பகுதிகளிலும், புதிய பகுதிகளிலும் உள்ள மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு அழுத்தம் இல்லை. எனவே, அங்குள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் தெருக்களில் 8000 தொட்டிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத இந்த பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தெருவில் உள்ள தொட்டியில் ஊற்றி விடுவார்கள். அதில் இருந்து பொதுமக்கள் குழாய்களில் பிடித்து செல்கிறார்கள். இதுபோன்று தினமும் 859 தெருக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் 2200 நடைகள் தண்ணீர் இலவசமாக லாரிகள் வழியாக சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் மூலம் ஒப்பந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் ஆன்லைன் வழியாக ‘டயல் பார் புக்கிங்’ செய்யும் முறை மூலம் தினமும் 900 லாரிகள் குடிநீருக்காக பதிவு செய்யப்படுகிறது.
பணம் செலுத்தி குடிநீர் பெறும் இந்த முறையில் 450 லாரிகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பதிவாகிறது. மீதமுள்ள 450 லாரிகள் சென்னையின் மத்திய பகுதியில் இருந்து புக் ஆகிறது. குடிநீர் தேவை உள்ளவர்கள் புக் செய்தால் அவர்களுக்கும் இந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை நகருக்குள் பணம் செலுத்தி லாரியின் மூலம் குடிநீர் பெறும் வீடுகள் எத்தனை உள்ளன, எதற்காக லாரியில் தண்ணீர் வாங்குகிறார்கள், அவர்களுக்கு தேவை என்ன, நகருக்குள் இன்னும் எத்தனை வீடுகள் குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது என்பதை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது 10 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. எந்தெந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்காமல் உள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். குடிநீருக்கு பணம் செலுத்தி புக்கிங் செய்யும் வீடுகளை கணக்கெடுத்து முழுமையான ஆய்வு நடத்தி அந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
* விபத்துகள் குறையும் குடிநீர் தேவைகளுக்காக லாரிகள் அடிக்கடி சென்னை சாலைகளில் வலம் வருகிறது. இந்த லாரிகளால் நடக்கும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிறது. எனவே, மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் விபத்துகள் குறையும், என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
* புனரமைப்பு பணி சென்னையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தையும் புனரமைத்து குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* 15 நாளில் புதிய இணைப்பு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள 35,000 தெருக்களில் குடிநீர் குழாய் அமைப்பு இல்லாத சுமார் 8,600 தெருக்களுக்குக் குடிநீர் குழாய் அமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. லாரிகள் மூலம் சப்ளை செய்வதை குறைத்து எந்தெந்த வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை என்பதை கணக்கெடுத்து அந்த பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.
