×

வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் பயணிக்கலாம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை-கோவை இடையே அடுத்த மாதம் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் பயணம் 6 மணி நேரமாக இருக்கும் என்று தெற்கு ரயில்வே ெதரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிவேக ரயிலாக வந்தே பாரத் உள்ளது. இது பயண நேரத்தை குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்களின் சேவை, வழித்தட எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ம் தேதி,  பிரதமர்  மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கோவை - சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை, வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் கடக்கும். காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 8.30 மணிக்கு கோவை செல்லும்.

மேலும், இந்த ரயில் புதன்கிழமையை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும். கோவை - சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். பொதுவாக இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் பயண நேரம் 7.50 மணிநேரம் எனவும், சதாப்தி ரயில் பயண நேரம் 7 மணிநேரமாகவும் உள்ளது. அப்படி இருக்க வந்தே பாரத் ரயில் 6 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Coimbatore ,Vande Bharat , Chennai to Coimbatore can be traveled by Vande Bharat train in 6 hours: officials inform
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்