×

ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். கோடை காலம் துவங்கிய நிலையில், சமவெளிப் பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பெரும்பாலான மக்கள் ஊட்டி, கொடைகானல் போன்ற குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டிருந்தனர்.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். நேற்று காலை மழை பெய்த போதிலும், அதனை கண்டு கொள்ளாமல் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்த நிலையில், படகு சவாரிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இதனை பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர்.


Tags : Ooty lake , Ooty lake, long time, waiting for boat ride, tourists
× RELATED ரூ.3.20 கோடி செலவில் ஏரியின் கரையோரம்...