மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவை வீழ்த்திவிட்டது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியனார். இந்திய அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ்தான் என விமர்சனங்கள் எழுந்தன.
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 175 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,675 ரன்களை குவித்துள்ளார். 3 சதங்களை அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை. சராசரியாக 25 ரன்களை மட்டுமே அடிக்கிறார். அதுவும் கடைசி 14 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதத்தை கூட அடிக்காமல் இருக்கிறார். இதில் 3 கோல்டன் டக் அவுட்டும் சேர்ந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட்டை சமாளிக்க முடியவில்லை. அவருக்கு இது செட்டாகாது என்பதால் அவரை இனி அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யகுமாருக்காக யுவ்ராஜ் சிங் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ``விளையாட்டுத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தாழ்வுகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதனை கடந்து தான் செல்ல வேண்டும். நாங்கள் அனைவருமே இதுபோன்ற ஒரு மோசமான புள்ளிகளை ஏதோ ஒரு தருணத்தில் அனுபவித்துள்ளோம். எனவே சூர்யகுமார் யாதவை விமர்சிக்க வேண்டாம். இந்திய அணியின் மிக முக்கிய துருப்புச்சீட்டாக சூர்யகுமார் யாதவ் தான் இருப்பார். அதனை நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் அதற்கு சூர்யகுமார் யாதவ் தான் உதவக்கூடியவராக இருப்பார். சூர்யா மீண்டும் உதயமாவார். யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். இதுஒருபுறம் இருக்க, சூர்யகுமாருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்காக வழக்கமாக 4வது இடத்தில் ஆடக்கூடிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதால் மீண்டும் அணிக்கு திரும்ப 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம். எனவே அவர் வரும் வரை நம்பிக்கையாக இருக்கக்கூடிய ஒரே ஒரு வீரர் சூர்யகுமார் யாதவ்.