ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு மின்னல் வேகத்தில் பறந்த லாரி: வீடியோ வைரலால் பரபரப்பு; 3 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தறிகெட்டு மின்னல் வேகத்தில் பறந்த லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் டிரைவர் தசரதன்(32). இவர் கட்டுமான பணிகளுக்கான எம்.சாண்ட், ஜல்லி கற்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் ஜல்லி ஏற்றிச்சென்று இறக்கி விட்டு, மீண்டும் ஓசூர் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் தர்கா பகுதியில் லாரி வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகொட்டு ஓடியது. முன்னால் சென்ற வாகனங்களை முந்தியபடியும் இடித்து தள்ளியபடியும் மின்னல் வேகத்தில் பறந்தது. தொடர்ந்து சர்வீஸ் சாலையில் சென்ற கார், டூவீலர்கள் மீது மோதி விட்டு, சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி கம்பியை உடைத்துக் கொண்டு நின்றது.

இந்த விபத்தில் காரில் சென்ற வீரபூசைய்யா, டூவீலரில் சென்ற கலையரசன் மற்றும் லாரி டிரைவர் தசரதன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக  உயிர்சேதம் ஏற்படவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு, ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் போலீசார், விபத்துக்குள்ளான லாரி, கார் மற்றும் டூவீலர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த லாரி விபத்துக்குள்ளானது அனைத்தும், அவ்வழியே சென்ற தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோக்கள் நேற்று வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது. விபத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: