×

ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

டெல்லி: டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ள நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்திசமாதி முன்பாக மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ்  தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யவுள்ளனர்.

டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் நேற்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் கட்சி முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வதேரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சி சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. எனினும், காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர்.

ராகுல் காந்தியை பாஜக பேச விடுவதில்லை. ராகுல் காந்தி தேசத்திற்காகவும், பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார், நாங்கள் நிறுத்த மாட்டோம். இன்று காந்தி ஸ்மாரக் சென்று அங்கு சத்தியாகிரகம் செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


Tags : Congress party ,Satyagraaga ,Delhi ,Raakulkandi , Rahul Gandhi, Disqualification, Delhi, Congress Party, Satyagraha Protest
× RELATED அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த...