×

அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நேற்று பதவியேற்றார். விழாவுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமை வகித்தார். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு சமீபகாலமாக மிகவும் வலுவடைந்து வந்தாலும், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு முதல் காலியாகவே இருந்தது. இந்தியா, அமெரிக்கா வரலாற்றில் இவ்வளவு காலம் தூதர் நியமிக்கப்படாமல் இருந்ததில்லை. அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தின் போது, கென்னத் ஜஸ்டர் பதவி விலகிய பின், 2021 ஜூலையில் லாஸ் ஏஞ்செல்சின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார். ஆனால், கார்செட்டிக்கு ஆளும் ஜனநாயக கட்சியிலேயே ஆதரவு இல்லாததால் செனட் அவையில் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் கார்செட்டி பெயரையே மீண்டும் பைடன் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி செனட் அவையில் நடந்த வாக்கெடுப்பில் 52 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் 2 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட கார்செட்டி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமை வகித்து விழாவை நடத்தி வைத்தார். கார்செட்டி குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்றனர். பதவியேற்ற கார்செட்டியை கமலா ஹாரீஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



Tags : Garcetti ,US ,India ,Kamala Harris , Garcetti Inauguration as US Ambassador to India: Kamala Harris Attends
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!