×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  சென்னை, தலைமைச்செயலகத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் மழைக்காலங்களில் நீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் விதமாக தலைமைச்செயலர் இறையன்பு தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர், குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமைச்செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு  தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.320  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.  மேலும், புதிய அறிவிப்பிற்கான ஒப்பந்தங்கள் கோரி பணிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க அறிவுறுத்தப்பட்டது. சென்ற ஆண்டு நடந்த பணிகளில் மீதமுள்ள பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டார். மேலும், மீதமுள்ள பணிகளை முடிக்க கால அட்டவணைகளை தயார்செய்து, அதனை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

 அதேபோல, பணி நடைபெறும் இடங்களில், தரம் மற்றும் பாதுகாப்பில் எந்த குறைபாடும், தொய்வும் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அனைத்து மண்டலங்களின் இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலர்கள் பணிகள் நடைபெறும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாவண்ணம் அனைத்து பணிகளையும், இந்தாண்டு பருவ மழை தொடங்குவதற்குமுன் முடிக்க உத்தரவிட்டார்.   




Tags : Chennai ,Municipal Corporation ,Chief Secretary , Drainage works to be completed in Chennai Municipal Corporation areas urgently: Chief Secretary orders to Public Utilities Officers
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்