சமூக விரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு பாஜ உள்ளது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து, உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 8 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார். பின்னர், கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் பட்டாசு விபத்திற்கு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சென்னை புறநகர் பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் ஐஎப்எஸ் என்று சொல்லக்கூடிய நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல ஆயிரம் கோடி ஏமாற்றியுள்ளனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில் தமிழ்நாடு பாஜவில் உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் நபர்கள்தான் இதுபோன்ற முறைகேடுகளை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது. தமிழக பாஜ நிர்வாகிகள் மீது பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து குற்றச்சாட்டுகளாக எழுந்து வருகிறது. தமிழ்நாடு பாஜ சமூக விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: