நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை திட்டிய விவகாரம் சட்டத்துறை துணை செயலாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: முதன்மை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘நீதிமன்ற வளாகத்திற்குள், அரசு வழக்கறிஞர்களை சத்தம்போட்டு திட்டிய சட்டத்துறை துணை செயலாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று சட்டத்துறை முதன்மை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சட்டத்துறை தொடர்பான விபரங்களை தெரிவிக்க, தமிழ்நாடு சட்டத்துறை துணை செயலாளர் சி.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இருந்த நீதிமன்ற அறைக்கு வழக்கு தொடர்பாக நாகராஜன் வந்துள்ளார்.

அப்போது அரசு வழக்கறிஞர்கள், துணை செயலாளரிடம் வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டுள்ளனர். அதற்கு துணை செயலாளர் உரிய பதில் அளிக்காமல், அரசு வழக்கறிஞர்களை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையிலேயே சத்தம் போட்டு திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நீதிமன்ற பதிவாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பிரச்னையை உயர் நீதிமன்ற பதிவாளர் நீதிபதி எம்.எஸ்.ரமேஷின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைவாக பேசிய நாகராஜன் நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்துள்ளார். சட்டத்துறை முதன்மை செயலாளரின் கீழ் பணியாற்றுவதால், இந்த வழக்கில் சட்டத்துறை முதன்மை செயலாளரையும் சேர்த்து உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதில் தரவேண்டும். தமிழ்நாடு சட்டத்துறை முதன்மை செயலாளர் உடனடியாக, துணை செயலாளர் சி.நாகராஜனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். விசாரணை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் நாகராஜன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: