மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை காவல் துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரம் என்ற தலைப்பில் குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு சென்னை சத்யம் திரையங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்பட காவல் துறை அதிகாரிகள், குறும்பட இயக்குநர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற 4 குறும்படங்களின் இயக்குநர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். மேலும், சென்னையில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுத்து, அதிகளவில் போதை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறை குழுவினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, போதைக்கு எதிரான கருத்துக்கள் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்தோடு சென்னை காவல்துறையால் தயாரிக்கப்பட்ட ‘காமிக் தொடர்’ புத்தகம் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காவல் துறையினர் தான் உண்மையான சிங்கங்கள். போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துகொள்ள வேண்டும். உண்மையான செய்திகளை விட, வதந்திகள் எளிதில் மக்களிடம் சென்று சேர்ந்துவிடுகிறது.

முதல்வர் பாராட்டு

இதுகுறித்து முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்ய வேண்டுமெனத் தொடர்ந்து கூறி வருகிறேன். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். பாராட்டுகள். போதைப்பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோர்த்திடுவோம்.

* போதைப் பொருளை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு: சங்கர் ஜிவால்

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், ‘போதை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். இந்நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிராக ஆவண குறும்படம் போட்டி நடத்தி, வெற்றி பெறும் குறும்படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிட்டு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பதிவு செய்திருந்தது. இதில் சிறந்த 4 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, போதைப் பொருட்களை ஒழிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்காக காவல் துறை சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும் தேவை,’ என்றார்.

Related Stories: