தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு

மதுரை: தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். மதுரை கூடுதல் நீதிமன்ற அடிக்கல்  நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: தமிழ்நாட்டில் நீதித்துறை கட்டிடங்கள் மற்றும் அதற்கு தேவையான  உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது.  பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பணியாற்றுகின்றனர்.

நீதிமன்ற பணிகளை நேரலை செய்வதன் மூலம் சட்டக்கல்லூரி மாணவர்களும் கற்றுக் கொள்ள முடியும். கொரோனா காலத்தில் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உயர்நீதிமன்றங்களில் 78 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

ஆங்கிலம் நமது முதல் மொழி அல்ல. நமது தாய்மொழியிலேயே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம். சில வழக்கறிஞர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் இளம் வழக்கறிஞர்கள் மொழியை ஒரு தடையாக பார்க்கக் கூடாது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மொழி பெயர்க்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகள் ஆங்கிலத்தில் இருக்கும்போது, மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அதனை தங்கள் மொழியில்  அறிந்து கொள்ள ரூ.50 ஆயிரம் செலுத்தி அறிந்து கொள்ளும் சூழல் இருந்தது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. உத்தரவுகள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 8.76 லட்சம் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரும் அறிந்து கொள்ளும் நிலை உருவாகும். சட்டத்துறையில் பெண்களுக்கு போதுமான பங்களிப்பு இல்லை என புள்ளி விவரம் கூறுகிறது.  

பெண்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடும்ப பொறுப்பு காரணமாக பெண்கள் கூடுதல் நேரம் பணியாற்ற இயலாது என எண்ணப்படுகிறது. குழந்தையை பராமரிப்பதும், குடும்பத்தை பராமரிப்பதும் ஆண்-பெண் என இருவருக்கும் சமமானது. ஆனால் அது பெண்களுக்கான கடமை என சமூகம் அவர்கள் மீது சுமத்துகிறது. இதனால் பெண் வழக்கறிஞர்களை பணியமர்த்துவதில் தயக்கம் உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வி விகிதம் அதிகமாக  உள்ளது. இவ்வாறு பேசினார்.

* தமிழ்நாட்டில் நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பட்டுள்ளது: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு

விழாவில் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், முதல்வர்களும் இணைந்து குறைகளைக் கண்டறிந்து திறம்பட சரி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.9 ஆயிரம் கோடி கீழமை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் இவற்றை முறையாக செலவிடுவதில்லை. ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். இ-கோர்ட் முறைக்கு தலைமை நீதிபதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இ-கோர்ட் முறைக்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிய நீண்ட காலம் ஆவதை தடுத்திட இந்த தொழில்நுட்ப வசதி பெரிதும் உதவும். இவ்வாறு பேசினார்.

Related Stories: