சிஆர்பிஎப் வீரர்களின் தியாகத்தால் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

ஜக்தல்பூர்: இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 84வது தின விழா சட்டீஸ்கர் மாநிலம் கரன்பூர் முகாமில் நடந்தது. இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த 9 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான வலுவான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இடதுசாரி தீவிரவாதம் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் சிஆர்பிஎப் வீரர்கள் தான்.

நக்சல், மாவோயிஸ்ட் இயக்கங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சி பணிகளுக்கான தடைகளை அகற்றி, பள்ளிகள், மருத்துவமனைகள், நியாய விலை கடைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வருவதில் சிஆர்பிஎப் வீரர்களின் பங்கு அளவிட முடியாதது. உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து, தீவிரவாத சக்திகளை அடக்குவதில் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த போராட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், அவர்களின் குடும்பத்தினரும் செய்த மிகப்பெரிய தியாகங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கையால் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: