×

கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்: வருணா தொகுதியில் சித்தராமையா போட்டி

பெங்களூரு: கர்நாடகா பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக சட்டசபைக்கு மே மாதம்  தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜ சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

அதேபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மாநில முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையிலும், கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சிதாபூர் தொகுதியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே நிறுத்தப்பட்டுள்ளார். அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress ,Karnataka assembly election ,Siddaramaiah ,Varuna , Congress releases list of 124 candidates for Karnataka assembly election: Siddaramaiah contests from Varuna constituency
× RELATED பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த...