×

அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

புதுடெல்லி: ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததால், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இவ்விசயத்தில் சர்வதேச ஊடகங்களும் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் எதிர்காலம் குறித்து குறிப்பிட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் நாடு முழுவதுமான தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

அதன்பின் அவரது தாயாரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டார். கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனக்கூறி, 23 மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்களில் சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறினர். அதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இருந்தாலும், அவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு விசுவாசி என்பதால், அவர்களை முன்னிலைபடுத்தியே அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது முதல் தேசிய அளவில் கட்சியை பலப்படுத்துவது வரை 2024 மக்களவை தேர்தலை மையப்படுத்தி மல்லிகார்ஜூன கார்கே போராடி வருகிறார். தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும்நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல்களை எழுப்பி வருகின்றன.

ஆனால் ஆளும் பாஜக அரசு, லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரத்தை கையில் எடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி இரு அவைகளிலும் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த விசயத்தில், தான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளதாக ராகுல்காந்தி முறையிட்டும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக 2019 மக்களவை தேர்தலின் போது குஜராத்தில் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பிரதமர் மோடியின் சமூகமான மோடி சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அந்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட எம்பி ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி, இரண்டு அல்லது இரண்டாண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள், தங்களது மக்கள் பிரதிநிதி தகுதியை இழக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவசர அவசரமாக ராகுல்காந்தியின் வயநாடு எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து நேற்று மக்களவை செயலகம் அறிவித்தது. தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது, தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெளிநாட்டு பத்திரிகை, ஊடகங்களான அல் ஜசீரா, நியூயார்க் டைம்ஸ், பிபிசி, தி கார்டியன் போன்றவை ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘மோடி அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக நின்ற கடைசி மக்களவை உறுப்பினரும் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது தகுதி நீக்கம் தேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருகாலத்தில் மிகவும் சக்திவாய்ந்த இயக்கமாக செயல்பட்ட அகில இந்திய காங்கிரஸ், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் மிகவும் மோசமான செய்தியாகும். மோடியின் நெருங்கிய நண்பர் கவுதம் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். ஆனால் அவரது குரல் தகுதிநீக்கம் மூலம் முடக்கப்பட்டது’ என்று கூறியுள்ளது.

மேலும், கத்தார் நாட்டில் இருந்து வெளியாகும் செய்தி இணையதளமான ‘அல் ஜசீரா’ வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து பத்திரிகையான ‘தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், ‘பிரதமர் மோடியை மற்ற குற்றவாளிகளுடன் ஆஃப்பிட்டு பேசியதாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. அதனால் ராகுல் காந்தி சிறை செல்ல வாய்ப்பில்லை.

ஒருவேளை ராகுல் காந்தியின் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தால், அவர் தனது மக்களவை எம்பி பதவியை மீண்டும் பெறமுடியும். அவ்வாறு நடக்கவில்லை என்றால், கேரளாவின் வயநாட்டில் அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இன்றைய நிலையில் இந்திய அரசியலில் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தெளிவாக இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய இங்கிலாந்தின் ‘பிபிசி’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் மூத்த எதிர்க்கட்சித் தலைவரான wகம் செய்தது, தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இது தவிர, அமெரிக்க செய்தித்தாளான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வௌியிட்ட செய்தியில், ‘எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய அரசியல் முகமான ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் மீதான நடவடிக்கையின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பத்திரிகையான ‘டான்’ பத்திரிகையில் வெளியிட்ட செய்தியில், ‘ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது, இந்திய எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாகும்’ என்று தெரிவித்துள்ளது.

லில்லி தாமஸ் வழக்கு மறுபரிசீலனை?
 இந்திய அரசியல் சாசனத்தின் 102 (1) (இ) பிரிவின் கீழ் ராகுல் காந்தி மீது தகுதி நீக்க நடவடிக்கைகளை மக்களவை செயலகம் எடுத்துள்ளது. வகுப்புவாத அல்லது மத வெறுப்பை பரப்பியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (ஏ) இன் கீழ் எம்எல்ஏ அல்லது எம்பி தண்டிக்கப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (ஏ) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, தண்டனை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 4வது உட்பிரிவின்படி, சிறை தண்டனை பெற்ற பிரதிநிதிக்கு மேல் நீதிமன்றம் தடை விதித்தால், அவரது மேல்முறையீடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை அவரை தகுதிநீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்க முடியும்.

ஆனால், கேரளாவை சேர்ந்த லில்லி தாமஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் 2013 ஜூலை 10ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, இந்தச் சட்டத்தின் பிரிவு 4-ஐ அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது. எனவே கீழமை நீதிமன்றங்கள் தண்டனை வழங்கிய உடனேயே மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய முடியும். இந்த நிலையில், லில்லி தாமஸ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை, ராகுல் காந்தி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு அல்லது ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை மறுபரிசீலனை செய்ய முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை ராகுல்காந்தி தட்டினால், இவ்விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியும். அப்போது ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அவரை தகுதி நீக்கம் செய்யவோ அல்லது இடைத்தேர்தலை அறிவிக்கவோ உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். ராகுல் காந்தியின் முன்புள்ள சட்ட வாய்ப்புகள் என்ன? என்று பல்வேறு சட்ட நிபுணர்களும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். லில்லி தாமஸ் வழக்கு மற்றும் தண்டனைக்கு எதிராக நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு ராகுல்காந்தி செல்வதற்குப் பதிலாக, சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது குஜராத் உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

ஆனால், அவரை தகுதி நீக்கத்தில் இருந்து பாதுகாக்க முடியாது. மாஜிஸ்திரேட் தீர்ப்புக்கு எதிரான வழக்கை அமர்வு அல்லது உயர் நீதிமன்றம் உடனடியாக முடித்துவைத்து, ராகுல் காந்தியை விடுவித்தால் மட்டுமே அவரது 8 ஆண்டு தகுதி நீக்கத்தை ரத்து செய்ய முடியும். ஆனால் செஷன்ஸ் அல்லது உயர் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கை முடித்து, ராகுல் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கத்தில் இருந்து அவரை காப்பாற்ற முடியும்.

அனைத்து எம்பிக்களும் ராஜினாமாவா?
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்த சில வாரங்களில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுக்க வியூகம் வகுக்கப்பட்டது. ராகுல் காந்திதகுதி நீக்கம் செய்யப்பட்டதால், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, ராகுலின் தகுதிநீக்கத்தை கண்டித்து, அனைத்து காங்கிரஸ் எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு எம்பி பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு இறுதிமுடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையிலான அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரடி களத்தில் பிரியங்கா காந்தி?
கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் எதிர்கால தேர்தல் அரசியலில் பிரியங்கா காந்தியின் பங்கு மேலும் அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால்., காங்கிரஸ் கட்சிக்குள் புதிய விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்திய வம்சாவளி அமெரிக்க எம்பி கண்டனம்
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்திக்கு எதிரான இந்த முடிவானது, காந்திய தத்துவத்திற்கும் இந்தியா மீதான மதிப்புகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இந்திய ஜனநாயகத்திற்காக, நீதிமன்றத்தின் முடிவை மாற்றுவதற்கு உங்களுக்கு (மோடி) அதிகாரம் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அமெரிக்க - இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜார்ஜ் ஆபிரகாம் வெளியிட்ட பதிவில்,  ‘ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதிநீக்கம் செய்தது, இந்திய ஜனநாயகத்திற்கு சோகமான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க எம்பி ரோ கன்னாவின் கருத்துக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் காஞ்சன் குப்தா, ‘இந்திய சட்டங்களை மீறி செயல்படுவதற்கு நீதித்துறைக்கு அப்பாற்பட்ட அதிகாரங்கள் பிரதமருக்கு இல்லை. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

அவசர சட்ட நகலை கிழித்ததால் வந்த வம்பு?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 8(4)-ஐ கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அப்போது அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கீழமை நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தின்படி, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவது தடுக்கப்படும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த அவசரச் சட்டத்தின்படி, தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை அடுத்த 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்ய முடியாது. மேலும், தண்டனை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அதுவரை அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த அவசர சட்டம் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆஃப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி (அப்போது கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்), அவசரச் சட்டத்தின் நகலை பொதுவெளியில் கிழித்தெறிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இந்த அவசரச் சட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது’ என்றார். அதனால் இந்த அவசர சட்டத்தை ஒன்றிய அமைச்சரவை திரும்பப் பெற்றது. ராகுல் காந்தியின் இந்த முடிவு இன்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவசர சட்டத்தின் நகலை ராகுல் காந்தி கிழித்து எறிந்ததால், அந்த சட்டத்தின்படி அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சட்ட நகலை கிழித்தவருக்கே, அந்த அவசர சட்டம் பயன்படாமல் போனது என்றும், அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால் குறைந்தபட்ச பாதுகாப்பு இருந்திருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இணைய தளத்தில் பெயர் நீக்கம்
ராகுல் காந்தியின் வயநாடு எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது பெயர் மக்களவை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது. அதுவரை உச்ச நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றால், ராகுல் காந்தியால் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட முடியாது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலிலாவது ராகுல் காந்தி போட்டியிட விரும்பினால், அவர் நீதிமன்ற வழக்கில் இருந்து வெளியேறுவது அவசியமாகிறது. உச்ச நீதிமன்றமோ, குஜராத் உயர் நீதிமன்றமோ அவரை விரைவில் விடுதலை செய்யாவிட்டால், ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது. ஒருவேளை சட்ட ரீதியாக ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டால், அவர் அரசியல் களத்தில் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும்.

Tags : President ,Raqul Gandhi , President then, MP disqualified today, Rahul Gandhi, political future`
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்