×

கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு

கம்பம்: கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்க கடந்த 2018ல் அதிமுக ஆட்சியில் அரசு ஆணை வெளியிட்டதோடு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்களின் போக்குவரத்துக்கான பஸ்களை இயக்கும் முக்கிய துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையாகும். தனியார் வசம் இருந்த இத்துறை கடந்த 1972 முதல் தமிழக அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒருசில பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து அரசு பஸ்களை இயக்குகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் என எட்டு தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் 1, கம்பம் 2, குமுளி, தேவாரம், போடி என ஆறு பணிமனை களிலிருந்தும் நாளொன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வண்டிகளை இயக்குவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே 1976ல் செய்து கொண்ட பரஸ்பர ஒப்பந்தப்படி, கம்பம் கிளையிலிருந்து கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளான குட்டிக்கானம் மற்றும் ஏலப்பாறை நகரங்களுக்கு இரு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியாறு, பாம்பனார், ஏலப்பாறை பகுதி பொதுமக்கள் தமிழகப்பகுதிக்கு வந்துசெல்ல இந்த பஸ்கள் பெரிதும் உதவியாக இருந்தது. அதன்பின் முதன்மை ஒப்பந்தத்தின் துணை ஒப்பந்தங்களின்படி, கம்பம் கிளையிலிருந்து தேக்கடி, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதிக்கும், பின் 2010 முதல், மேட்டுக்குழி, சாஸ்தாநடை பகுதி வழித் தடத்திலும் பஸ் இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அனுமதி பெற்று தற்போது வரை பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே, போக்குவரத்து வண்டிகளை இயக்குவது தொடர்பான முதன்மை ஒப்பந்தத்தின் ஆறாவது துணை ஒப்பந்தப்படி, தமிழக போக்குவரத்து துறை, கேரள மாநிலத்தின் 30 வழித்தடங்களில் 54 பஸ்களையும், 25 வழித்தடங்களில் தற்போதைய இயக்கப்படும் பஸ்களை நீட்சி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில், கம்பத்தில் இருந்து ஏலப்பாறை சென்ற பஸ்சை ஒருநாளைக்கு இருமுறை கோட்டயம் வரையும், குமுளி வழியாக கட்டப்பனை சென்ற பஸ்சை, நான்கு முறை கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை வரையிலும், கம்பம்-தேக்கடி செல்லும் இரண்டு பஸ்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தவும், கம்பம்-சுல்தானியா பஸ்சை போடி-மூணாறு வரையிலும், சிற்றிடை போக்குவரத்தாக கம்பம்-சாஸ்தாநடை ஒரு முறை சென்ற பஸ்சை இருமுறை சாஸ்தாநடை செல்லவும் 2018ம் ஆண்டு மே மாதம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டது.

ஆனால் அப்போதைய அதிமுக அரசு ஆணை வெளியிட்டதோடு சரி, ஆட்சி முடியும்வரை புதிய வழித்தடங்களுக்கு பஸ் இயக்க போக்குவரத்து கழகங்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்குவதா அல்லது மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து இயக்குவதா என்ற குழப்பத்தில் புது வழித்தடத்தில் பஸ் இயக்குவதை மறந்துவிட்டனர். தமிழக கேரள எல்லையோர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டு அரசு ஆணை வெளியிட்டதோடு அதிமுக அரசால் செயல்படுத்த முடியாமல் நின்றுபோன இத்திட்டத்தை, மக்களின் நலன் கருதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடைமுறைப்படுத்தி புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து ஏலத்தோட்ட விவசாயி மணி கூறுகையில், ‘‘1976ல் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தம் முதல், கம்பத்தில் இருந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் வரை சென்று வந்த அரசு பஸ் கடந்த சில ஆண்டுக்கு முன்னால் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. குமுளி வழியாக கட்டப்பனை சென்று வந்த தமிழக அரசு பஸ் ஒன்று கடந்த சில நாட்களாக கம்பம்மெட்டு, சேற்றுக்குழி வழியாக கட்டப்பனை சென்று வருகிறது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் பயனடைந்து உள்ளனர்.

தற்போது கம்பத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தின் நெடுங்கண்டம், கட்டப்பனைக்கு தலா 2 பஸ்களும், சாஸ்தாநடை, ஏலப்பாறைக்கு தலா ஒரு பஸ்சும், தேக்கடிக்கு 2 பஸ்களும் இயக்கப்படுகிறது. தமிழக ஏலத்தோட்ட தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது குமுளி வழியாக கட்டப்பனை சென்று வந்த தமிழக அரசுபஸ் கம்பம்மெட்டு, சேற்றுக்குழி வழியாக செல்வது எங்களைப் போன்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு மிக உதவியாக உள்ளது. அதுபோல் கம்பத்தில் இருந்து புதிய வழித்தடமான கோட்டயத்திற்கு பஸ் இயக்கப்படுமானால் கம்பம் பகுதிகளில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு மிக உதவியாக இருக்கும்’’ என்றார்.

Tags : Kerala ,Kambam , Will government buses run on new routes in Kerala state from Kambam?: Auction workers, farmers, people's expectations
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...