×

பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி

ஊட்டி: பைக்காரா அணை பகுதியில் 4 வயது புலி இறந்து கிடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட வனங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. பைக்கார அருகே புலிகள் நடமாட்டம் உள்ளது. வனங்களிலிருந்து அவ்வப்போது புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பைக்காரா அணையை ஒட்டி உள்ள கரையோரங்களில் வந்து நீர் அருந்தி செல்வது வாடிக்கை.

ஊட்டி பைக்காரா அணை, முக்கூருத்தி ஒதுக்குக்காடு பகுதியில் கரையோரத்தில் புலி ஒன்று தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்தது.  இதை அந்த வழியாக படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மற்றும் வன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட ஆய்வில் இறந்த புலியின் உடலில் காயங்களோ வேறு எந்த அறிகுறிகளோ தென்படவில்லை. மேலும் இன்று (சனிக்கிழமை)  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ்  தலைமையில்  ஜப்பக்காடு வனமன கால்நடை மருத்துவர் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட மாந அலுவலர் கவுதம் கூறுகையில், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், 4 வயது மதிக்கத்தக்க பெண் புலி இறந்த நிலையில் தண்ணீரில் கிடந்தது. இறந்த புலியின் உடலில் காயங்களோ பிற அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. எனவே நாளை (இன்று) நடக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும், என்றார்.

Tags : Baikara dam , A female tiger found dead on the banks of Baikara dam
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்