×

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளத்தின் ஆழம் அதிகரிப்பதாக அதிகாரிகள் தகவல்: புவியியல் வல்லுநர்கள் குழு நேரில் ஆய்வு

வாணியம்பாடி:  ஆலங்காயம் அருகே விவசாய விளை நிலத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தின் ஆழம் தொடர்ந்து அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு செய்து நீர், மண் ஆகியவற்றை சோதனைக்காக எடுத்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(75), விவசாயி. இவருக்கு கூவல்குட்டை மலையடிவார பகுதியையொட்டி விவசாய விளை நிலம் உள்ளது. இதில் அவர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் கடந்த 20ம் தேதி அதிகாலை திடீரென மர்மமான முறையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. மக்காச்சோளம் பயிருக்கு வழக்கம்போல நீர் பாய்ச்ச சென்ற முருகேசன் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு நேரில் சென்ற வருவாய் துறை அதிகாரிகள் 40 அடி ஆழத்துக்கு பள்ளம் இருக்கலாம் என கருதினர். மேலும் இதுகுறித்த தகவலை புவியியல் வல்லுனர்களுக்கு தெரிவித்தனர். இதற்கிடையில் அப்பகுதி மக்கள் திரண்டதால், பள்ளத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கயிறு கட்டி யாரும் அருகே செல்ல முடியாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து இந்திய புவியியல் துறை தமிழ்நாடு கிளையின் இயக்குநர் ஹிஜாஸ் பஷீர் தலைமையிலான, மூத்த புவியியலாளர்கள் அசரார் ஆஹமத் மற்றும் ஜெயபால் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழுவினர் வந்தனர். தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட இடத்தினை ஆய்வு செய்து, அங்கு இருந்த மண், நீர், பாறை உள்ளிட்டவைகளை சேகரித்து கொண்ட புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை ஆய்வுக்காக பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் இதுபோன்று சம்பவங்கள் ஏதேனும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏதேனும் அப்பகுதியில் நடைபெற்றுள்ளதா? என்று கிராம மக்களிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து வல்லுனர்கள் குழுவினர் கூறுகையில், ‘தற்போது மண் மாதிரி உள்ளிட்டவை ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. முழு ஆய்வுக்குப் பின்னரே எப்படி திடீர் பள்ளம் ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்க முடியும்’ என்றனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் டிரோன் கேமரா மூலம் எடுத்த புகைப்படத்தில் பள்ளத்தின் ஆழம் மேலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘40 அடி ஆழத்துக்கு பள்ளம் இருக்கலாம் என  கூறப்பட்டது. தற்போது புவியியல் வல்லுனர்கள் அளவீடு செய்ததில் 23 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருப்பது  தெரியவந்துள்ளது. இந்த பள்ளம் குகை போன்று வளைந்து செல்வதால், பள்ளத்தின்  ஆழம் 23 அடிக்கு மேல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதேபோல் பக்கவாட்டில்  இருந்து அவ்வப்போது மண் சரிந்து பள்ளத்தின் ஆழம் தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. மேலும் அதில் நீருற்று பெருக்கெடுத்து கிணறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பள்ளத்துக்கு அருகில் செல்ல வேண்டாம்’ என்றனர். பள்ளத்தின் ஆழம் தொடர்ந்து அதிகரிப்பதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : Alankayam , Officials informed that sudden giant sinkhole in agricultural land near Alankayam is increasing in depth: team of geologists inspected in person
× RELATED மரங்களை வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்